12 ஆவது வன்னியின் பெருஞ்சமர் என அழைக்கப்படும் துடுப்பாட்டப் போட்டியில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணி 88 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
கிளிநொச்சி மகா வித்தியாலய அணிக்கும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணிக்குமிடையிலான 12 ஆவது வன்னியின் பெருஞ்சமர் துடுப்பாட்டப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி களத்தடுப்பைத் தேர்வு செய்த்து.
முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மகா வித்தியாலயம் 49.4 பந்துப் பரிமாற்றங்களில் 107 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணி சார்பாக K.ஜீவநிதன் -26 ஓட்டங்களையும், M.மருதன் 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி சார்பாக P.தங்கநிலவன் 5 இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி 25.1 பந்துப் பரிமாற்றங்களில் 57 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்தது. அணி சார்பாக A.சானுஜன் -22 ஓட்டங்களையும், M-தேனுஜன் 14 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். பந்துவீச்சில் கிளிநொச்சி மகா வித்தியாலய அணி சார்பாக P.அபிசாந் 5 இலக்குகளையும் J.கார்த்தீபன் 3 இலக்குகளையும் வீழ்த்தினர்.
இரண்டாவது இனிங்சை ஆரம்பித்த கிளிநொச்சி மகா வித்தியாலய அணி, முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் வரை 16 பந்துப் பரிமாற்றங்களில் 38 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை இழந்திருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.