உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவரான 86 வயதுடைய போப்பாண்டவர் பிரான்சிஸ், சமீப காலமாக கடுமையான வலியாலும், குடல் அடைப்புகளாலும் அவதிப்பட்டு வந்தார். அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவரைக் குடல் சத்திர சிகிச்சையைச் செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர்.
அதன் பிரகாரம், நேற்று முன்தினம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு, அவருக்கு ஏற்கனவே செய்து கொண்ட சத்திர சிகிச்சையினால் ஏற்பட்ட காயத்திசுவை நீக்கவும், குடல் இறக்கத்தைச் சரி செய்யவும் சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. 3 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த சத்திர சிகிச்சைக்குப்பின்னர் போப்பாண்டவர் நலமாக உள்ளதாக வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மேத்தியோ புருனி தெரிவித்துள்ளார்.
போப்பாண்டவருக்கு நடந்த சத்திர சிகிச்சை தொடர்பாக ரோம் ஜெமெல்லி மருத்துவமனையின் வயிறு மற்றும் நாளமில்லா அறிவியல்கள் துறையின் இயக்குநர் டாக்டர் செர்ஜியோ அல்பீரி, போப்பாண்டவருக்கு நடந்த சத்திர சிகிச்சை வெற்றிகரமாக அமைந்துள்ளது. அவருக்கு எந்தச் சிக்கலும் இல்லை. வேறு நோய் எதுவும் கண்டறியப்படவில்லை. அவர் கண் விழித்தார். உற்சாகமாக இருக்கிறார். அடுத்த சத்திர சிகிச்சையை எப்போது வைத்துக்கொள்ளலாம்? என்று நகைச்சுவையாகப் பேசினார், எனத் தெரிவித்திருந்தார்.
போப்பாண்டவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஏற்கனவே பெருங்குடலில் 33 செ.மீ. அளவுக்கு வெட்டி அகற்றப்பட்டிருந்தது. தற்போதைய சத்திரசிகிச்சையின் பின்னர், போப்பாண்டவர் மருத்துவமனையில் அவருக்கான சிறப்பு அறையில் மேலும் சில நாட்கள் தங்கியிருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது சந்திப்புகள் அனைத்தும் 18 ஆம் திகதி வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.