கந்தானையில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தினால் கணேமுல்லையில் வசிக்கும் 50 வயதுடைய தொழிற்சாலையின் கணக்காளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நச்சுப் புகையை சுவாசித்த 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தீயினால் தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள ஒரு பெரிய பகுதியில் புகை பரவியதால், அருகிலுள்ள மூன்று பள்ளிகளைச் சேர்ந்த பெருந்தொகையான மாணவர்கள் புகை சுவாசித்ததால் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
புனித செபஸ்தியான் பாலிகா மகா வித்தியாலயம், புனித செபஸ்தியன் பெண்கள் ஆரம்பப் பாடசாலை மற்றும் புனித செபஸ்தியன் ஆண்கள் ஆரம்பக் கல்லூரியைச் சேர்ந்த குறைந்தது 60 மாணவர்கள் கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜா-எல பகுதியிலுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள், இலங்கை இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் பாதிக்கப்பட்ட மாணவர்களை உடனடி மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி செய்துள்ளனர்.
இரசாயன தொழிற்சாலை தீப்பற்றி எரிந்தமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
கம்பஹா மற்றும் கந்தானை தீயணைப்பு நிலையங்கள் மற்றும் வெலிசரவில் உள்ள இலங்கை கடற்படை முகாம் ஆகியவற்றின் தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேர கூட்டு முயற்சியின் பின்னர் தீயை அணைக்க முடிந்தது.