கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செயல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் நேற்று (30) முதல் 45 மணி நேரத் தியானத்தை மேற்கொண்டுள்ளார்.
சுவாமி விவேகானந்தர் இதே பாறையில் 3 நாட்கள் தியானமிருந்திருந்தது வரலாறு. 142 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது இந்தியப் பிரதமர் மோடி அங்கு தியானம் செய்வதால் இது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், 6 கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், 7ஆவது மற்றும் இறுதிக் கட்டம் 7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் உள்ள 57 தொகுதிகளில் நாளை  நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரங்கள் இன்றுடன் (31) நிறைவுபெறுகின்றன.
இதனையடுத்து தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் திகதி வெளியிடப்படவுள்ளன.
கடந்த இரு நாடாளு மன்றத் தேர்தல்கள் முடிவடைந்த பின்னரும் இந்தியப் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டிருந்தார்.
2014இல் உத்தரப் பிரதேசத்தில் பிரதாப்கரில் தியானம் செய்தார். 2019இல் இமயமலையில் கேதார்நாத் குகையில் மின்வசதி இல்லாத அறையில் காவி உடையுடன் தியானம் மேற்கொண்டார்.
இந்நிலையில் தற்போதைய தேர்தல் முடியும் தறுவாயில் மோடி, இந்தியாவின் கடைக்கோடியிலுள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் தொடர்ச்சியாக 45 மணி நேரம் தியானம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணசித் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற மோடி, அதே தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் களத்திலிருக்கிறார்.
இந்நிலையில் வாரணாசியில் இறுதிக்கட்டப் பிரசாரத்தை மேற்கொண்ட மோடி, கன்னியாகுமரிக்குச் சென்று, அங்குள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மொத்தமாக 48 மணித்தியாலங்கள் இந்தியப் பிரதமர், விவேகானந்தர் நினைவிடத்தில் தங்குவதால், இறுக்கமான முறையில் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 11 எஸ்.பிக்கள் மேற்பார்வையில், 3,500 பொலிஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, விவேகானந்தர் மண்டபத்துக்கான படகுப் போக்குவரத்தும் நேற்றே ரத்துச் செய்யப்பட்டிருந்தது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply