ரி-20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் நமிபியா அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.
நமிபியா அணியும் ஓமான் அணியும் சம எண்ணிக்கையிலான ஓட்டங்களை பெற்றுக் கொண்டமையினால், போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. பார்படோஸில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நமிபியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஓமான் அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
ஓமான் அணி சார்பில் காலித் கைல் 34 ஓட்டங்களை எடுத்திருந்தார். நமிபியா அணி சார்பில் பந்துவீச்சில் டிரம்பெல்மேன் 4 விக்கெட்டுக்களையும், டேவிட் விசே 3 விக்கெட்டுக்களையும்பெற்றுக்கொண்டனர்.
110 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. நமிபியா அணி சார்பில் ஜான் பிரீலின்க் 45 ஓட்டங்களையும், நிகோலாஸ் டவின் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ஓமான் அணி சார்பில் பந்துவீச்சில் மெஹ்ரான் கான் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
போட்டி சமநிலையில் நிறைவடைந்தமையினால் இரு அணிகளும் சூப்பர் ஓவரில் விளையாடியிருந்தன. சூப்பர் ஓவரில் நமிபியா அணி விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 22 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஓமான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 10 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் நமிபியா அணி சூப்பர் ஓவரில் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக நமிபியா அணியின் டேவிட் விசே தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, ரி-20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி பங்குபற்றும் முதலாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
நியூயோர்க்கில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இலங்கை அணி தென்னாபிரிக்கா அணியை எதிர்கொள்ளவுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு இந்தப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.