மன்னாரில் மக்கள் போராட்டம்!

மன்னார் மாவட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை மற்றும் அந்தோனியார் புரம் கிராமங்களைச்  சேர்ந்த ஏழை விவசாயிகள் தமக்கான  காணி உரிமை கோரி இன்று மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மாந்தை மேற்கு பகுதியில் உள்ள சோழ மண்டலம் குளத்தின் கீழ் 30 வருடங்களுக்கு மேலாக அரச அனுமதியுடன் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்த அந்தோனியார்புரத்தைச் சேர்ந்த மக்களுக்கு நபருக்கு தலா 2 ஏக்கர் காணி வீதம் வழங்குவதாகவும், அதன் ஊடக வாழ்வார செயற்பாடுகளை முன்னெடுக்க உதவுவதாகவும் அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வாக்குறுதியை அடிப்படையாகக் கொண்டு மக்கள் எந்தவொரு காணி ஆவணங்கள் இன்றி பல வருடங்களாக அப்பகுதியில் வாழ்வாதாரச் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர்.

இவ்வாறான நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குறித்த காணிகளை அந்தோனியார்புரம் மக்களுக்கு வழங்காது வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் உள்ளடங்கலாக மன்னார் மாவட்டத்தைச் சேராத வவுனியா மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த செல்வந்தர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த நபர்களால் காணிகளைப் பண்படுத்தும் செயற்பாடும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் தங்களுக்குச் சொந்தமான காணியைத் தாங்கள் பூர்வீகமாகப் பயன்படுத்திய காணியைத்  தங்களுக்கு வழங்காது வெளிநாட்டைச் சேர்ந்த நபர்களிடமும், பணம் படைத்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு காணி சீர்திருத்த ஆணைக்குழுவினர் அவர்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த போராட்டம் இன்று காலை இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், இந்த நாட்டில் ஏழைகளுக்கு நீதியே இல்லையா ?, அரச அதிகாரிகளே காணி மாபியாக்களின் கூட்டாளிகளா? அரச அதிகாரிகளே துரோகத்துக்குத் துணை போகாதீர்கள், தமிழ் அரசியல்வாதிகளே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றீர்களா? போன்ற பல்வேறு வாசகங்களை ஏந்தியிருந்தனர்.

போராட்டத்தின் இறுதியில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரனிடம் போராட்டகாரர்கள் கையளித்த நிலையில், இவ்வாறு காணி தொடர்பான பிணக்குகளை நீண்ட நாட்கள் முடிவுத்தாமல்  வைத்திருக்க முடியாது எனவும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பலருக்குக் காணி இல்லாத நிலையில் வேறு மாவட்டத்தையும் வெளிநாட்டையும் சேர்ந்தவர்களுக்குக் காணி வழங்குவதை ஏற்க முடியாது எனவும் அரச அதிபர் தெரிவித்தார்.

மேலும் இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு குறித்த காணி விடயம் தொடர்பாக மாவட்ட செயலகம் சார்பாக அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கவுள்ளதாகவும், இன்றைய போராட்டம் தொடர்பான ஆவணங்களையும் அறிக்கையுடன் சமர்ப்பித்து விரைவில் குறித்த பிரச்சினை தொடர்பில் தீர்க்கமான ஒரு முடிவைப் பெற்றுத்தருவதாகவும் அரச அதிபர் உறுதியளித்த்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply