நாடாளுமன்றத்தின் செயற்பாடு ஒரு தவறான முன்னுதாரணமாக அமையலாம்! ரில்வின் சில்வா தெரிவிப்பு!

உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாடாளுமன்றம் ஏற்காமையானது ஒரு தவறான முன்னுதாரணமாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்கால முன்னேற்றம் கருதி நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறையின் மூன்று நிறுவனங்களும் சமநிலையில் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாடாளுமன்றம் ஏற்காமையானது சட்டத்தின் ஆளுமைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே கருதப்படும்  எனவும் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை புறக்கணிக்கும் இத்தகைய போக்கினால் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லாத ஒரு தோற்றம் உருவாக்கப்படுவதுடன், நாட்டு மக்களும் அவ்வாறே நடக்கத் தொடங்கினால் எத்தகைய நிலை ஏற்படும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

பொலிஸ் மா அதிபரை நியமிப்பதிலும் அரசாங்கம் அரசியலமைப்பை மீறி தன்னிச்சையாக செயற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள ரில்வின் சில்வா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னை ஒரு தாராளவாதியாக காட்டிக்கொண்டாலும், சர்வாதிகாரி போல் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அவர் ஹிட்லர் பாணியிலான ஓர் ஆட்சியாளர் எனவும் தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட ஆட்சியாளர்களை பதவியிலிருந்து தூக்கி எறிவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு எதிர்வரும் தேர்தலில் கிடைக்கவுள்ளது, அந்த வாய்ப்பானது இந்நாட்டு மக்களுக்கு கிடைக்கின்ற சிறந்தவொரு வாய்ப்பு எனவும் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply