இரத்தினபுரி, நிவித்திகல நிரியெல்ல தமிழ் வித்தியாலயத்தில் ஜி.சீ.ஈ. சாதாரண தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் மீது பாடசாலை நேரத்தில், தோட்ட கள அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தோட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மேற்படி தாக்குதல் சம்பவத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக தோட்ட இளைஞர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகம் தொலைபேசி வாயிலாக தெரிவித்ததையடுத்து, பாடசாலைக்கு ரூபன் பெருமாள் சென்றிருந்தார்.
நீதி கோரி பாடசாலைக்கு முன்பாக திரண்டிருந்தவர்களுடன் அவர் கலந்துரையாடியதுடன் இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்குக் கொண்டு சென்றதுடன் மாணவன் மீது தாக்குதல் நடத்திய தோட்ட அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்யும்படி தோட்ட நிர்வாகத்துக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரையும் உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நிவிதிகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் இரத்தினபுரி மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோரைத் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்த ரூபன் பெருமாள், நிவித்திகல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ள தாக்குதலுக்குள்ளான மாணவனைச் சந்தித்தும் நலம் விசாரித்தார்.