ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் தாதியர் சங்க மாநாட்டில் பங்கேற்றமை தேர்தல் விதிமீறல் என கூறுவது நகைப்புக்குரியது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அகில இலங்கை தாதியர் சங்கம் தொழிற்சங்க அமைப்பென்ற ரீதியில் அண்மையில் இந்த தாதியர் மாநாட்டை நடாத்தியதுடன், தாதியர்கள் கடமை நேர விடுமுறையிலேயே இதில் கலந்து கொண்டதாகவும், இந்நிகழ்விற்கு அதிதியாக அநுரகுமார திஸாநாயக்க அழைக்கப்பட்டதாகவும் அதன்படி அவர் அங்கு சிறப்புரை ஆற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க இதுவரை வேட்புமனுவைக் கூடக் கையளிக்கவில்லை என்ற அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு தர்க்கரீதியிலான குற்றச்சாட்டல்ல.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்ந்து பாடசாலைகளுக்குச் சென்று பாடசாலை மாணவர்கள் முன்னிலையில் கூட்டங்களை நடத்துகின்றார். அதேபோல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக பல்வேறு இடங்களுக்குச் சென்று நிவாரண பொருட்களை விநியோகித்து வருகின்றார். ஆனால், அவை எதனையும் இவர்கள் விமர்சிப்பதில்லை.
எனவே, அகில இலங்கை தாதியர் சங்கத்தின் மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பங்கேற்றமை தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பான விடயம் அல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.