வடக்கு மக்கள் மிகப்பெரும் மாற்றத்தை எதிர்பார்த்துள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் அந்த மாற்றத்திற்கு இடையூறாக இருந்தது என்று கூறும் நிலை உருவாகிவிடக் கூடாது என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளையில், தமிழரசுக் கட்சியின் தீா்மானத்தின் பின்னணியில் இந்தியா உள்ளதா என்ற சந்தேகத்தையும் அவா் வெளியிட்டுள்ளாா்.
ஜனாதிபதித் தோ்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளினதும் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன.
வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மக்கள் சந்திப்புகளை அனுரகுமார நடத்தியுள்ளார்.
இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளா் அநுரகுமார திசநாயக்க தனியாா் தொலைக்காட்சி ஒன்றுக்களித்த நோ்காணலில் பல விடயங்கள் தொடா்பாகவும் தெரிவித்த தகவல்கள் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களிடையே தேசிய மக்கள் சக்திக்கு உள்ள ஆதரவு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அநுரகுமார முக்கியமான தகவல்கள் பலவற்றை வெளியிட்டிருக்கின்றாா்.
அதன்போது அநுரகுமார கூறுகையில், “இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு வருகை தந்திருந்த போது எங்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தினார். இந்தியா மற்றும் இலங்கையுடனான இராஜதந்திர உறவுகள் தொடர்பிலும் இதற்கு முன்னரான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட வலய பாதுகாப்பு தொடர்பிலும் கலந்துரையாடினார்” என்றும், “இதனை தவிர அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவில்லை” என்றும் தெரிவித்தாா்.
“இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் சந்திப்பு மற்றும் அதன் பின்னர் இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்த தீர்மானத்திற்கு இடையே ஏதாவது தொடர்பு உள்ளதா என்ற சந்தேகங்கள் உள்ளன” என்றும் தெரிவித்த அநுரகுமார திசநாயக்க, “அப்படி தொடர்பு இருந்தால் எதிர்காலத்தில் தெரியவரும்” என்றும் குறிப்பிட்டாா்.
எவ்வாறாயினும் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் தொடர்பில் தங்களுக்கு வேறு விமர்சனப் பார்வையொன்று உள்ளது என்று தெரிவித்த அநுரகுமார, “வடக்கு, கிழக்கிற்கு அப்பால் தென்பகுதியிலுள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே சமூகத்தில் புதிய மாற்றத்திற்கான எண்ணம் உள்ளது” என்றும், “அதுவே எங்கள் மீதான விருப்பத்தை காட்டுகின்றது” என்றும் குறிப்பிட்டாாா்.
“இவ்வாறான மாற்றத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் தீர்மானத்தை தமிழரசுக் கட்சி எடுத்ததா என்ற விமர்சனம் தெற்கில் உருவாகின்றது” என்றும் சுட்டிக்காட்டிய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளா், “2022ஆம் ஆண்டுக்கு பின்னர் இனவாத அரசியல் இல்லாமல் போயுள்ளது” என்றும், “மீண்டும் பெரிய மாற்றங்களை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு அந்த மாற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் அவர்களே என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டால் அது பொருத்தமாக இருக்காது” என்றும் தெரிவித்தாா்.
“இதற்கு முன்னர் வடக்கு மக்கள் ராஜபக்ஷக்கள் இருக்கும் முகாமை தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர்” என்று குறிப்பிட்ட அநுரகுமார, “அவ்வாறாக ராஜபக்ஷவுக்கு எதிரானவர்களுக்கே வாக்குகளை வழங்கும் மனநிலையே இருந்தது” என்றும், “இதன்படியே 2010இல் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இவ்வாறான காலத்தில் மக்களுடன் இணைந்து தமிழரசுக் கட்சிக்கு தீர்மானம் எடுக்கலாம்” என்றும் அநுரகுமார திசநாயக்க மேலும் தெரிவித்தாா்.