அமைச்சரவைப் பேச்சாளா் விஜித ஹேரத் தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51/1 நகல் வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாளைய தினம் ஜெனீவாவில் இலங்கையின் நிலைப்பாடு தெரியப்படுத்தப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தையும் இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் நகல்வடிவை நிராகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கம் உட்பட மனித உரிமை பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பது குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை பேரவையுடனும், வழமையான மனித உரிமை பொறிமுறையுடனும், தொடர்ந்தும் ஒத்துழைப்பு அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றது என்று அமைச்சா் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான விஜித ஹேரத், நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை ஜெனீவாவிற்கு தெரியப்படுத்துவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனினும் இதற்கு காலம் தேவை. நாளை ஜெனீவாவில் இந்த நிலைப்பாட்டை தெரியப்படுத்துவோம்” என்றும் அமைச்சா் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.