46 ஓட்டங்களுக்குள் சுருண்ட இந்திய அணி! நியூசிலாந்து அபாரப் பந்துவீச்சு!!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்து மோசமான சாதனையைப் படைத்திருக்கிறது.

பெங்களூருவில் மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் இரண்டவது நாளான இன்றும் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.

இந்த நிலையில் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். இது இந்திய அணிக்கு மிகப் பாதகமான முடிவாக அமைந்தது.

இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா இரண்டு ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார்.

விராட் கோலி, சர்பராஸ்கான் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் இந்திய அணி 10 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த நிலையில் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் ஆகியோர் நிதானமாக விளையாடி ஓட்டங்களைச் சேர்த்தனர். இந்த ஜோடி இந்திய அணியை கௌரவமான இலக்கிற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் ஜெய்ஸ்வால் 63 பந்துகளை எதிர்கொண்டு 13 ஓட்டங்களை மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார். அதிரடி வீரர் ரிஷப் பந்து 49 பந்துகளை எதிர் கொண்டு 20 ஓட்டங்கள் சேர்க்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல், ஜடேஜா அஸ்வின் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

குல்தீப் யாதவ் இறுதியில் இரண்டு ஓட்டங்களும், சிராஜ் 4 ஓட்டங்களும் எடுக்க இந்திய அணி 31.2 ஓவர்களில் 46 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி ஒரு விக்கெட்டும், மட் ஹென்றி ஐந்து விக்கெட்டுகளையும் வில்லியம் ஓ ரூர்க்கி நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்கள்.

இந்திய மண்ணில் இந்திய அணி அடித்த குறைந்தபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர் இது என்ற சோகமான சாதனை படைக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா அடித்திருக்கும் மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். அடிலெய்டில் 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 36 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தது இன்னும் முதலிடத்தில் இருக்கிறது. 1974 ஆம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 42 ஓட்டங்கள் எடுத்தது இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், தற்போது நியூசிலாந்துக்கு எதிராக 46 ஓட்டங்களில் ஆட்டம் இழந்திருப்பது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply