கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (02) இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையின் போது கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பத்தரமுல்லை, இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பொலிஸார் கலைக்க முற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
தம்மை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக்குமாறு கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் காரணமாக கல்வி அமைச்சுக்கு முன்பாக கொட்டாவை – பொரளை வீதி (174 பஸ் பாதை) போக்குவரத்து முற்றாக தடைப்பட்டதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தின் போது உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் காயமடைந்திருந்துள்ளதுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.