2015 ஆம் ஆண்டு 35 சத்திரசிகிச்சை அறை விளக்குகளை கொள்வனவு செய்யும் போது அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக சுகாதார அமைச்சின் உயிரியல் மருத்துவ பொறியியல் சேவை பிரிவில் கடமையாற்றிய உயிரியல் மருத்துவ பொறியியலாளர் ஒருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (17) குற்றப்பத்திரிக்கையை கையளித்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று கையளிக்கப்பட்டது.
அதன் பின்னர், குற்றம் சாட்டப்பட்டவரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணை முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவரின் வெளிநாட்டுப் பயணத்தைத் தடை செய்த நீதிமன்றம், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பிரதிவாதிக்கு ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டும் என மற்றுமொரு பிணை நிபந்தனை விதிக்கப்பட்டது.