நத்தார் பண்டிகையை முன்னிட்டு 398 சிறைக்கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்கபட்டுள்ளதுடன் இம்முறை சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாக கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு மேற்படி கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 34 வது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய தேர்வு செய்யப்பட்ட 398 கைதிகளுக்கு இந்த சிறப்பு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 4 பெண்களும் 394 ஆண்களும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
குறித்த கைதிகளுக்கு நிபந்தனைகள் மற்றும் வரம்புகளுக்கு அமையவே பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதோடு இன்று நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.
அத்தோடு உரிய பாதுகாப்புகளுடன் திறந்த முறையில் சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாகவே கைதிகளை காண உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட உள்ளது.
கைதிகளை பார்வையிட வரும் உறவினர்கள் உணவு, இனிப்பு மற்றும் சுகாதார பொருட்கள் ஆகியவற்றை ஒருவருக்கு தகுந்த அளவில் மாத்திரம் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து சிறைச்சாலைகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ள விதி முறைகளுக்கமைய கைதிகளை காண்பிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.