தலைமன்னார் ஊர்மனை கிராம 10 வயது சிறுமி கொலைவழக்கின் சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த  பெப்ரவரி மாதம் 10 வயது சிறுமி  பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட  55 வயது நபரை எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்ற இந்த நபர் கடந்த 15ஆம் திகதி திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தலைமன்னார் பொலிஸார் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளின் பின்னர், கடந்த திங்கட்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 26ஆம் திகதி (இன்று) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த நபர் இன்றையதினம்  (26) மீண்டும் விசாரணைக்கு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த நபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி மாலை காணாமல் போன அக்கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, தனது அம்மம்மாவின் வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள தென்னந்தோப்பில் இருந்து மறுநாள் 16ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டார்.

அதனையடுத்து, பிரேத  பரிசோதனையின்போது  சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்தது.

அதன் பின்னர், வெளி மாவட்டத்தில் இருந்து சென்று குறித்த தென்னந்தோப்பில் வேலை செய்துவந்த  55 வயதுடைய நபர் இக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேளை வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றதை தொடர்ந்து, கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply