சிரியாவின் ஹமா நகரத்திற்கு அருகில் கிறிஸ்மஸ் மரம் எரிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
மத்திய சிரியாவில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் சுகைலாபியா என்ற நகரத்தில் கிறிஸ்மஸ் மரத்திற்கு நபர்கள் சிலர் தீமூட்டுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் சிலரே இதனை செய்தனர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரதான கிளர்ச்சி குழு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் அந்த பகுதியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்,புதிய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மத சிறுபான்மையினத்தவர்களை பாதுகாக்கவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
தலைநகர் டமஸ்கஸில் உள்ள பப் டுமாவில் சிலுவையையும் சிரிய கொடியையும் ஏந்தியபடி பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சிலுவைக்காக எங்கள் ஆன்மாக்களை தியாகம் செய்வோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் இதுவரை கிறிஸ்தவ மதத்தினை பின்பற்றியது போன்று தொடர்ந்தும் அதனை பின்பற்றுவதற்கு அனுமதிக்காவிட்டால் அதன் பின்னர் நாங்கள் இந்த நாட்டிற்கு தேவையில்லாதவர்கள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜோர்ஜ் என்பவர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் பல்வேறு இனத்தவர்களும் மதப்பிரிவினரும் வசிப்பது குறிப்பிடதக்கது.