நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் கடந்த வாரத்தில் இருந்து பருப்பு, வெங்காயம், டின் மீன் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு பருப்பு, சிவப்பு வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் முக்கிய இறக்குமதியாளர்களில் இந்தியாவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக காணப்படுகின்றது.
தற்போது அதிகரிக்கும் கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் இந்தியா முடக்கப்பட்டமையினாலேயே இந்த பற்றாக்குறை ஏற்பட்டது என்றும் இது பருப்பு, சிவப்பு வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் வேறு சில மசாலாப் பொருட்களின் இறக்குமதியில் பாரிய தாக்கம் செலுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தாய்லாந்தில் இருந்து கொழும்புக்கு டின் மீன் ஏற்றுமதி செய்யும் நிறுவனமும் டின் மீன் இறக்குமதி செய்ய முடியாது என கொழும்பு மொத்த விற்பனையாளர்கள் சங்கத்திற்கு அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில்,
உலகத்தில் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளமையினால் இந்த பொருட்களை அத்தியாவசியம் என வகைப்படுத்த முடியவில்லை. ஏனெனில் அனைத்து இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுள்ளன, இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிக மோசமான நிலை என தெரிவித்தார்.
ஆனாலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவொரு பற்றாக்குறையும் இல்லாமல் சந்தைக்கு செல்வதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு செயலாளர் காமினி செனரத்துக்கு அறிவுறுத்தியிருந்தார் எனவும் அறிய முடிகின்றது.
அதன்படி, சதோச நிறுவனம் தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களை சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.