இந்தியப் பல்கலைக்கழகங்களில் சிங்களத்தைக் கற்பிப்பதற்கும், இலங்கைப் பல்கலைக் கழகங்களில் இந்தியைக் கற்பிப்பதற்கும் வசதியாக இரு நாடுகளிலுமுள்ள பல்கலைக் கழகங்களில் அவ்வத்துறைகளை அமைப்பதற்கும், கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்கும் இரு நாடுகளும் கொள்கையளவில் இணக்கங்கண்டுள்ளன.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயத்தின் (ஐ.சி.சி.ஆர்) தலைவர் முனைவர் வினய் சஹஸ்ரபுத்தேக்கும், இலங்கையின் பிரதம மந்திரி தினேஸ் குணவர்த்தனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் திங்கட்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, இந்தியப் பல்கலைக்கழகங்களில் சிங்களத்தைக் கற்பிப்பதற்கும், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இந்தியைக் கற்பிப்பதற்கும் வசதியாக இரு நாடுகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் அவ்வத் துறைகளை அமைப்பதற்கு ஐ.சி.சி.ஆர் தலைவர் முன் வைத்த கோரிக்கையைப் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஏற்றுக் கொண்டார். இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு இந்தச் சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டது.
இலங்கை மாணவர்கள், இசைக் கலைஞர்கள், கலைஞர்களுக்கும் பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே கலாசார மற்றும் இசைப் பரிமாற்றங்களுக்கும் அனுசரணை வழங்கி வருவதோடு, நூற்றுக்கணக்கான இலங்கை மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கியமைக்குமாக இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயத்தின் தலைவருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
இளம் தொழில் வல்லுநர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்த ஐ.சி.சி.ஆரின் இளைஞர் தலைமைத்துவப் பயிற்சிக்கான திட்டங்கள் பெரிதும் பயன்படுவதாகவும் அவர் கூறினார்.
இரு நாடுகளிலும் உள்ள கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட புதிய புதுமையான கைவினைத் திறன்களில் இருந்து இரு தரப்பினரும் கற்றுக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் குணவர்தன ஐ.சி.சி.ஆர் தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்.
பாரம்பரியத்தை மேம்படுத்தும் திறன்கள் மற்றும் கல்வியில் சிறந்து விளங்குபவர்களுக்கு இடையே தொடர்ச்சியான தொடர்புகளை உறுதி செய்வதற்காக ஐ.சி.சி.ஆர் இன் இலங்கை முன்னாள் மாணவர்களின் முதல் கூட்டத்தை தான் ஆரம்பித்து வைத்ததாக முனைவர் வினய் சஹஸ்ரபுத்தே கூறினார். இந்தியாவில் படித்த இந்த மாணவர்கள் தங்கள் சொந்த நாட்டில் பிரகாசமான வாழ்க்கையைத் தொடர்வார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இளங்கலை, முதுகலை மற்றும் கலாநிதிப் பட்ட ஆராய்ச்சி நிலைகளில் 1100 க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களின் கீழ் நாற்பத்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் கல்வியைத் தொடர ஐ.சி.சி.ஆர் மாணவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான உதவித் தொகைகளை வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.
இந்தச் சந்திப்பின்போதான கலந்துரையாடலில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேன மற்றும் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர்களான மஹிந்த குணரத்ன மற்றும் தீபா லியனகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.