இமாச்சல பிரதேசத்தின் ரோதங் பகுதியில், உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதையை கடந்த அக்டோபரில் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டது.
இது தற்போது சுற்றுலா தலமாக மாறியுள்ளது. தினந்தோறும் ஏராளமானோர் அடல் சுரங்கப்பாதையை பார்க்க வருகின்றனர். இந்நிலையில் இமாச்சலில் கடந்த சில நாட்கள் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, அடல் சுரங்கப்பாதை அருகே குவிந்த பனியால் 300க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து குல்லு காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் சிங் கூறுகையில், ‘‘கடந்த சனிக்கிழமையன்று இங்கு வந்த 300 பேர் கொண்ட சுற்றுலாப்பயணிகள் குழு, பனிப்பொழிவு அதிகமானதன் காரணமாக சிக்கிக் கொண்டது.
தகவல் அறிந்தவுடன் மீட்பு பணியில் உடனடியாக இறங்கினோம். லகவுல்-ஸ்பிதி காவல்துறையும், மணாலி காவல்துறை அதிகாரிகளும் எங்களுடன் இணைந்துகொண்டனர். 48 பேருந்துகள் மற்றும் 24 காவல் துறை வாகனங்கள் மற்றும் உடனடி மீட்பு காவல்படை என இந்த பணியில் ஈடுபட்டன.
எனினும் மழை மற்றும் அதிக பனியின் காரணமாக மணாலி செல்லும் வழியில் பாதி தூரத்துக்கு மேல் செல்ல முடியவில்லை. சாலைகள் பயணத்துக்கேற்றார்போல் இல்லாமல் வழுக்கும் தன்மையுடனும் இருந்ததால் சிக்கலானது. தீவிர முயற்சிக்குப் பிறகு அடல் சுரங்கப்பாதையின் தெற்குப்பகுதியான துந்தியில் நள்ளிரவு 12 மணிக்கு மீட்கப்பட்டனர்.
பின்பு அவர்கள் பாதுகாப்பாக மணாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்’’ என்றார். அடல் சுரங்கப்பாதையில் வருகிற நாட்களில் இன்னும் பனிப்பொழிவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஜனவரி 3 முதல் 8ம் தேதி வரை பனிப்பொழிவு அதிகமாகவே இருக்கும் என்று எச்சரித்துள்ளது. இதனால் இமாச்சலப் பிரதேசத்தில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.