13ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் -இந்தியா

தமிழ் மக்களின் அபிலாசைகளான சமத்துவம், நீதி, நிம்மதி மற்றும் கௌரவம் ஆகியவை பேணப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் அரசியலமைப்பில் காணப்படும் 13ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நீண்டகால நிலைப்பாட்டில் இந்தியா தொடர்ந்தும் இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜெய்சங்கர், இலங்கை அரசாங்கத்துடனான கலந்துரையாடல் குறித்து தமிழ் தேசியப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மீதும் மாகாண சபை முறைமை மற்றும் தோற்றத்தின் மீதும் இலங்கையின் புதிய பிரதிபலிப்பு குறித்து இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

இதன்போது ஜெய்சங்கர் தெரிவிக்கையில், “இலங்கை அரசாங்கத்துடனான எனது சந்திப்புகளில், இலங்கையின் ஐக்கியமும் உறுதியும் பேணப்படுவதில் இந்தியா தொடர்ந்தும் பற்றுறுதியுடன் செயற்படுகிறது என்பதையும் தமிழ் மக்களின் அபிலாசைகளான சமத்துவம், நீதி, நிம்மதி மற்றும் கௌரவம் ஆகியவையும் பேணப்படவேண்டும் என்றும் கூறி வந்துள்ளேன்.

நல்லிணக்கச் செயற்பாடுகள் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதோடு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு குறித்து இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்திய உறுதிப்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதையும் நான் தெரிவித்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நல்லிணக்கத்தை அடைவதன் மூலம் தமிழர்கள் உட்பட அனைத்து இனத்தவர்களின் எதிர்பார்ப்புகளையும் உணர்ந்து இலங்கை செயற்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2020 செப்டம்பர் 26 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய மெய்நிகர் இருதரப்பு உச்சி மாநாட்டின் போது நம்பிக்கை தெரிவித்தமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு கடந்த ஐந்தாம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜங்க அமைச்சர் வியாழேந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தரப்புக்களுடன் தனித்தனியான சந்திப்புக்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir