இந்தியாவிடம் இருந்து மேலும் 2.5 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தடுப்பூசிகள் ஒரு மாதத்தில் இலங்கையை வந்தடையும் என்றும் ஆரம்ப சுகாதார சேவைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை இதனை விட மேலதிகமாக 3.5 மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவை, நாட்டை வந்தடைந்ததும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கும் பணியை அரசாங்கம் தொடங்கும் என்றும் வைத்தியர் அமல் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பமான வெள்ளிக்கிழமை மட்டும் 5 ஆயிரத்து 286 பேர் தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில் நேற்று சனிக்கிழமை 32 ஆயிரத்து 539 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 825 பேர் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.