வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்

பாடத்திட்டங்களை விரைவாக முடிப்பதற்காக வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாடசாலைகள் மூப்பட்டமையினால் பாடத்திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும் என்பதனால் இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த முறை நடைமுறை வந்தால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 07 நாட்களும் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறைந்தது 4 நாட்களுக்கு மட்டும் பாடசாலைகளுக்கு சென்றால் போதும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஒரு வகுப்பில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இருப்பதை தடுக்கும் வகையில் 30 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட ஒரு வகுப்பை குறைந்தபட்சம் இரண்டு குழுக்களாக பிரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அந்தவகையில் நாட்டில் 50 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 1,486 பாடசாலைகளும், 100 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 1,560 பாடசாலைகளும், 150 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 1,138 பாடசாலைகளும், 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 977 பாடசாலைகளும், 500 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 2,690 பாடசாலைகளும், 1,000 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 1,375 பாடசாலைகளும் இருப்பதாக தெரிவித்த அவர், புதிய நடைமுறையின் கீழ் இவற்றை நடத்துவதுவதில் எந்த சிரமம் ஏற்படாது என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை 1,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட சுமார் 868 பாடசாலைகளுக்கு புதிய நடைமுறையை செயற்ப்படுத்துவது எளிதல்ல எனவும் ஆனால் நாங்கள் அதைச் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், ஏனெனில் கிட்டத்தட்ட 4.5 மில்லியன் மாணவர்கள் மற்றும் சுமார் 300,000 ஆசிரியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மார்ச் 20 முதல் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக மொத்தம் 276 பாடசாலை நேரங்கள் இழந்துள்ளன. மேலும் முடிவடையாத பாடத்திட்டங்களை எவ்வாறு முடிப்பது என்பது குறித்த பிரச்சினைக்கு தாம் விரைவில் தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ளதாகவும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு இந்த வாரம் மாகாண கல்வி அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த அவர்களின் யோசனைகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர் என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir