வர்த்தக செயற்பாட்டுக்கு இடையூறாக உள்ள கரைச்சி பிரதேச சபை என தெரிவித்து மரக்கறிகளை வர்த்தகர் ஒருவர் பிரதேச சபையின் வாசலில் கொட்டிய சம்பவம் இன்று பதிவாகியது.
கிளிநொச்சி சேவைச்சந்தையில் வர்த்தக செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் வர்த்தகர் ஒருவர் தமது வர்த்தக நடவடிக்கைக்கு இடையூறாக கரைச்சி பிரதேச சபை உள்ளதென தெரிவித்தும், பிரதேச சபையின் செய்பாட்டால் மரக்கறிகள் பழுதடைந்து தேங்கியதாக தெரிவித்தும் இன்று காலை மரக்கறிகளை கரைச்சி பிரதேச சபை பிரதான வாசலில் கொட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் வர்த்தகர் குறிப்பிடுகையில்,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமது வர்த்தக செயற்பாடுகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாடு வழமைக்கு திரும்பி வரும் நிலையில் வர்த்தக செயற்பாடுகளும் வழமைக்கு திரும்பி வருகின்றது.
நிரந்தர கட்டடத்தின் ஒரு பகுதியில் வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள நிலையில் ஒரு தொகுதியினர் தற்காலிக கொட்டகையிலேயே வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வர்த்த செயற்பாடுகளுற்காக அனுமதிக்கப்பட்ட பகுதியில் பூட்டப்பட்டிருந்த வர்த்தக நிலைய உரிமையாளருடன் பேசி வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுத்த நிலையில், கரைச்சி பிரதேச சபையினரால் தடுக்கப்பட்டுள்ளது.
மழை, வெயில் காரணமாக குறித்த தற்காலிக இடத்தில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடு்க முடியாது உள்ளது.
இந்த நிலையிலேயே அங்கு இன்று காலை வர்த்தக நடவடிக்கைக்காக சென்றேன். இவ்வாறான நிலையில் கரைச்சி பிரதேச சபையினால் வர்த்தக நிலைய உரிமையாளர் அச்சுறுத்தப்பட்டுள்ளார் இவ்வாறான நிலையில் கரைச்சி பிரதேச சபையின் அடாவடிநிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். மிக மோசமாக அவர்கள் நடந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனிடம் வினவியபோது,
கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த காலப்பதுகியில் சுகாதார பிரிவின் அறிவுறுத்தலிற்கமைவாக நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கைகளை கரைச்சி பிரதேச சபை முன்னெடுத்திருந்தது.
அந்த வகையில் நெருக்கமான பகுதி வரிசைகள் இரண்டை சீட்டு முறைமூலம் வழங்குவதற்கு வர்த்தக சங்கம் நடவடிக்கை எடுத்தது.
குறித்த வர்த்தகரின் கடை வரிசை தவிர்ந்த மற்றைய வரிசைக்கு சீட்டு கிடைத்தமையால் அவர்கள் நிரந்தர கட்டடத்தில் வர்த்தக செயற்பாடுகளை கடந்த திங்களன்று ஆரம்பித்தனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை மற்றைய வரிசையிலும் வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அதுவரை அவர்கள் வழமைபோன்று தற்காலிக இடத்திலேயே வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும். இக்கட்டான காலப்பகுதியில் வர்த்தகர்கள் பிரதேச சபையின் நடவடிக்கைகளிற்கு ஒத்துழைத்திருந்தனர்.
ஏனையபிதேச சபைகள் சேவை சந்தைகளை பொது வெளிகளிலும், விளையாட்டு மைதானங்களிலும் முன்னெடுத்தன. ஆனால் கரைச்சி பிரதேச சபையின் சேவை சந்தை அந்த வளாகத்திலேயே முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் ஏனைய வர்த்தகர்கள் அமைதியாக இருக்க குறித்த வர்த்தகர் மாத்திரம் இவ்வாறு செயற்பட்டதாகவும் தெரிவித்தார்.
எனினும், கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையில் உள்ள கிளிநொச்சி சேவை சந்தையில் 13 வர்த்தகர்கள் வரை தற்காலிக கொட்டகையில் சிரமங்களின் மத்தியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழை வெயில் காலநிலை தற்போது மாறி மாறி நிலவுகின்ற நிலையில் பெரும் சிரமங்களின் மத்தியில் வர்த்தக செயற்பாடுகள் இடம்பெற்ற வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.