கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, லெபனான் நான்கு நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க இரண்டு மாதங்களுக்கு முன்பு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக அரசாங்கம் தளர்த்திக் கொண்டிருந்த நிலையில், தற்போது மொத்தமாக நாடு முடக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் ஹசன் டயப் கூறுகையில், ‘முந்தைய நான்கு நாட்களில் 100 இற்க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளது. சமூக தொலைவு குறித்த வழிகாட்டுதல்களை புறக்கணித்துள்ளனர். இது அலட்சியம் மற்றும் பொறுப்பு இல்லாதது’ என கூறினார்.
சுகாதாரம், வேளாண்மை, உணவு மற்றும் உற்பத்தித் தொழில்களைத் தவிர்த்து, நேற்று உள்ளூர் நேரம் 19:00 முதல் திங்கள் 05:00 வரை இந்த முடக்க நிலை இருக்கும்.
கடந்த வாரம், கடைகள், உணவகங்கள் மற்றும் முடி திருத்தும் இடங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டன. ஆனால் அவை இப்போது மீண்டும் மூடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இது ஏற்கனவே தொற்றுநோய்க்கு முன்பே மோசமான நிலையில் இருந்தது.
லெபனானில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 886பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26பேர் உயிரிழந்துள்ளனர்.