நியூஸிலாந்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்

நியூஸிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றை மிக சிறப்பாக கையாண்டதாக பாராட்டப்பட்ட நியூஸிலாந்தில், மதுபான விடுதிகளை தவிர்த்து வணிக வளாகங்கள், திரையரங்குகள், முடித்திருத்தகங்கள், உணவகங்கள் என அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டன.

அத்துடன், 10 பேர் வரை ஒன்றாக சேர்ந்து சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் சுகாதார முன்னேற்பாடு நடவடிக்கைகளால், அண்மைய தினங்களாக நியூஸிலாந்தில் கொரோனா (கொவிட்-19) பாதிப்பு பெரிதளவில் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. அத்துடன் மிக முக்கியமாக, கடந்த மூன்று நாட்களாக அங்கு எந்த புதிய தொற்று பாதிப்பும் உறுதிசெய்யப்படவில்லை.

சிறந்த பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கையால் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை கட்டுப்படுத்திவரும் நியூஸிலாந்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1497பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,411பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 21பேர் உயிரிழந்துள்ளனர். 65பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் கவலைக்கிடமாகவுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir