‘மிஸ்டர் இந்தியா’ ஆணழகன் பட்டம் வென்ற ஜெகதீஷ் லாட்(34) கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் பல முக்கிய நபர்களை இழந்து வருகிறோம். கொரோனா 2ஆம் அலை முதல் அலையைக் காட்டிலும் தீவிரமாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ‘மிஸ்டர் இந்தியா’ ஆணழகன் பட்டம் வென்ற ஜெகதீஷ் லாட் (34) கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் தான் ஜெகதீஷ் லாட்டிற்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனால் அவர் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 4 தினங்களுக்கு முன், அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவரது மனைவியும் மகளும் மருத்துவமனையில் அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தனர். அவரது உடல்நிலை விரைவாக தேறிவிடும் என்றே அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனிற்றி, ஜெகதீஷ் லாட் நேற்று உயிரிழந்தார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம், மிஸ்டர் இந்தியா போட்டியில் இரு முறை தங்கப் பதக்கம் ஆகியவற்றை வென்ற ஜெகதீஷ் லாட், மகாராஷ்டிராவைப் பூர்விகமாகக் கொண்டவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குஜராத்திற்குக் குடிபெயர்ந்த இவர், வதோதராவில் சொந்தமாக ஜிம் ஒன்றை நடத்தி வந்தார்.