முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தினமல்ல அவ்வாறு இருக்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன்று அனுஷ்டிக்க அனுமதியில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து இராணுவ வெற்றி தினம் இம்முறை மிகவும் அமைதியான முறையில் நடத்தப்படவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழமையாக ஆடம்பர நிகழ்வுகள் பலவற்றை உள்ளடக்கி, அணிவகுப்புகள் நடத்தி போர் வெற்றி தினத்தைக் கொண்டாடுவோம்.
ஆனால், இப்போது நாட்டின் நிலைமையில் எம்மால் ஆடம்பரமாக நிகழ்வுகளை முன்னெடுக்க முடியாது. ஆகவே, அமைதியாக வெற்றி தினத்தைக் கொண்டாட அரசு தீர்மானம் எடுத்துள்ளது.
அதற்காக இராணுவத்தை நாம் மறந்துவிட்டோம் என்ற அர்த்தம் அல்ல. இந்த நாட்டின் அமைதிக்காக உயிர்த் தியாகம் செய்த அனைத்துப் பாதுகாப்புப் படையினரையும் நாம் நினைவுகூர்ந்து அவர்களுக்கான நாளாகக் கொண்டாடுவோம்.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர நினைவுத் தூபி முன்னிலையில் போர் வெற்றி தினம் அனுஷ்டிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார் .