உலகம் முழுவதும் டெல்டா வகை கோவிட் வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சில நாடுகளில் 3, 4வது அலையின் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் தற்போது தொற்று சற்று அதிகரித்து வருகிறது. தொற்றுக்கு ஆளாவோரில் 70 சதவீதம் பேர் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அங்கு, மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை. இருந்தும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிக்க வேண்டும் என, பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. ஆனால் மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து, ‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும்; அலுவலகம் வர அனுமதி மறுக்கப்படும்; சம்பளம் வழங்கப்படாது; உணவகங்கள், ஷாப்பிங் மால்களில் நுழையத் தடை விதிக்கப்படும்’ என, பாகிஸ்தான் அரசு கெடுபிடிகளை விதித்தது.
இதையடுத்து அந்நாட்டு மக்கள் தற்போது தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். சில தடுப்பூசி மையங்களில் கி.மீட்டர் கணக்கில் மக்கள் அணிவகுத்துக் காத்து நின்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 200 மில்லியன். இவர்களில் வெறும் 6.7 மில்லியன் மக்கள் மட்டுமே இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் அதிரடி அறிவிப்பால் ஒரே நாளில் ஒரு மில்லியன் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.