தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் வசந்தி கைது

பணம் பறிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி உட்பட 2 பேரை தனிப்படை போலீசார் ஊட்டி அருகே கோத்தகிரியில் இன்று காலை கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர் பேக் வியாபாரி அர்ஷத் (32).

சொந்த தொழில் செய்வதற்காக மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த பாண்டியிடம் கடன் கேட்டிருந்தார். அவரிடம் பணம் வாங்குவதற்காக கடந்த ஜூலை 5ம் தேதி மதுரை வந்தார்.

அவர் கூறியபடி நாகமலை புதுக்கோட்டை – தேனி மெயின் ரோட்டில் காத்திருந்தார்.

அப்போது அவர் தனது பையில் ரூ. 10 லட்சம் பணம் வைத்திருந்துள்ளார்.

பால்பாண்டி, இவரது நண்பர் கார்த்திக் உள்ளிட்ட சிலருடன் நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி உள்ளிட்டோர், அங்கு வந்து அர்ஷத்தை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றுள்ளனர். பின்னர் அவர் வைத்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரில், இன்ஸ்பெக்டர் வசந்தி உட்பட 5 பேர் மீது 5 பிரிவுகளில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில் இன்ஸ்பெக்டர் வசந்தி, அர்ஷத்திடம் இருந்து ரூ. 10 லட்சம் பணம் பறித்தது உண்மை என தெரியவந்தது.

மேலும் பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட அர்ஷத்துக்கு, அவர் கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தொடர்ந்து அவர் தலைமறைவானார். இந்த வழக்கில் கடந்த 10ம் தேதி தேனியை சேர்ந்த பால்பாண்டியை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ரூ. 61 ஆயிரத்தை கைப்பற்றினர். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் உக்கிரபாண்டி மற்றும் சீமைச்சாமியை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ. ஒரு லட்சத்து 65 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி வசந்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.

இந்த மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் வசந்தியை துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார் தலைமையிலான 3 தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊட்டி சென்ற தனிப்படை போலீசார், அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் ஊட்டி அருகே உள்ள கோத்தகிரியில் தனியார் விடுதியில் இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் அவரது கார் டிரைவரை இன்று காலை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களை மதுரை அழைத்து வந்து, தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

.

You May Also Like

About the Author: kalaikkathir