காட்டுமன்னார்கோவில் : கீழணையில் இருந்து கடலுார், தஞ்சை, மயிலாடுதுறை டெல்டா பாசனத்திற்கு வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்.
கடலுார், தஞ்சை மற்றும் மயிலாடுதுறை டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் விளை நிலங்கள் கீழணை காவிரி பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதியும், கல்லணையில் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டன. கீழணைக்கு 26ம் தேதி தண்ணீர் வந்தது. கல்லணையில் கடந்த 11ம் தேதி முதல் கூடுதலாக தண்ணீர் திறந்ததால், வடவாற்றில் தண்ணீர் திறந்து வீராணம் ஏரி கடந்த 24ம் தேதி நிரம்பியது. தற்போது கல்லணையிலிருந்து கீழணைக்கு கொள்ளிடம் ஆற்றில் 508 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
அணையின் நீர் மட்டம் 8.70 அடியாக உள்ளது.இந்நிலையில், கடலுார் மாவட்டம் வடக்கு ராஜன் வாய்க்கால், வடவாறு, தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டம் தெற்கு ராஜன் வாய்க்கால், குமுக்கி மன்னியாறு, விநாயகன் வாய்க்கால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அணைக்கரை கீழணையில் நேற்று மாலை 3.30 மணிக்கு நடந்தது. தெற்கு கொள்ளிடம் பகுதி தெற்கு ராஜன் வாய்க்கால் மதகில் நடந்த நிகழ்ச்சிக்கு கடலுார் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பற்கேற்று பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.