தேர்தல் குறித்து நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் மக்களைப் பாதுகாக்கும் வகையில் தீர்மானம்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து அரசியல்வாதிகளின் விமர்சனங்களை நாம் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. சுகாதார அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு இரண்டையும் கருத்தில்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் விதத்தில் தீர்மானங்களை எடுக்கவுள்ளோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தலை நடத்தியதால்தான் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் மீண்டும் பரவியது என்ற குற்றச்சாட்டை ஏற்றுகொள்ள நாம் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல்கள் திணைக்களம் மீதான அரசியல் விமர்சனங்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதில் முன்னெடுக்கப்படும் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கலந்தாலோசித்து வருகின்றது. அதேபோல் நடத்தப்படவுள்ள தேர்தலில் புதிதாக மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்தும் தொடர்ச்சியாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

குறிப்பாக சொல்லப்போனால், கைவிரலில் மை பூசும் முறையை எவ்வாறு கையாள்வது, கைகளில் பிடிக்காது மாற்று வழிமுறைகளில் மை பூசுவது குறித்தும் ஆலோசிக்கின்றோம்.

இந்தியாவில் தேர்தல்களின்போது ஒரு புள்ளி அளவில் அல்லது சற்று பெரிய புள்ளியாக மையை பூசும் முறையும் கடைப்பிடிக்கப்படுகின்றது. அதனைப் பயன்படுத்த முடியுமா அல்லது மாற்று வழிமுறைகள் ஏதேனும் இருப்பின் அதனை கையாள்வது குறித்து ஆலோசிக்கின்றோம். சுகாதார ஆலோசனைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.

அதேபோல் தேர்தல் நடத்தப்பட்டால் ஒரே தினத்தில் முடிவுகளை அறிவிப்பதா அல்லது ஒரு சில நாட்கள் எடுத்துக்கொண்டு கட்டம் கட்டமாக அறிவிப்பதா என்ற காரணிகளும் கலந்துரையாடப்பட்டு வருகின்றன.

இம்மாதம் இறுதிக்குள் தீர்மானம் ஒன்றை எடுக்க முடியும். நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று வரும் வரையில் எம்மால் எந்தத் தீர்மானமும் எடுக்க முடியாது. நாம் தனிப்பட்ட முறையில் எடுக்கும் தீர்மானம் எதனையும் வெளியில் அறிவிக்க முடியாது.

தேர்தலை நடத்தியதால்தான் கொரோனா தொற்று நோய் மீண்டும் பரவியது என்ற குற்றச்சாட்டு வராத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்போது நாம் தேர்தலை நடத்தத் தயங்குகின்றோம், தேர்தலை நடத்துவதில் நாம்தான் தடையாக உள்ளோம் என்ற விமர்சங்களை அரசியல்வாதிகள் சிலர் முன்வைத்து வருகின்றனர்.

தேர்தலை நடத்திய பின்னர் எம்மால்தான் நாட்டில் கொரோனா தொற்று நோய் பரவியது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படலாம். எனவே, சுகாதார அதிகாரிகள் எமக்கு சான்றிதழ் ஒன்றை வழங்கும் வரையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

இப்போது அரசியல்வாதிகள் முன்வைக்கும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் எதனையும் நாம் கருத்தில்கொள்ளவில்லை. நாம் மக்கள் பக்கம் சிந்தித்து தீர்மானம் எடுக்க முடியுமே தவிர அரசியல்வாதிகளின் தேவைக்காக எம்மால் தீர்மானம் எடுக்க முடியாது. அரசியல்வாதிகளின் விமர்சன குற்றச்சாட்டுக்களை நாம் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை” – என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir