ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது

நாடளாவிய ரீதியில் கடந்த இரண்டு நாட்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

அதேநேரம் இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுலாக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று முதல் தற்காலிகமாக தளர்த்தப்படுகிறது.

இதன்படி, இன்று முதல் நாடளாவிய ரீதியில் மறு அறிவித்தல் வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

இதேவேளை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை இன்று முதல் முன்னெடுக்கவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவினால் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாடுமுழுவதும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ள நிலையில் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர், பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இதேநேரம், இன்று அதிகாலை 4 மணிக்கு பின்னர் ஊரடங்கு அனுமதிப்பத்திர பரிசோதனை இடம்பெறமாட்டாது என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இரவு 10 மணிமுதல் அடுத்த நாள் அதிகாலை 4 மணிவரை, பொலிஸ் வீதித் தடை நடைமுறையும் ஊரடங்கு அனுமதிப்பத்திர பரிசோதனையும் மேற்கொள்ளப்படும்.

காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir