வேட்புமனுக்களை இரத்துச்செய்ய ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் – மஹிந்த அணி

“நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து பிற்போட எதிரணியினர் அரசியல் சூழ்ச்சியை முன்னெடுக்கின்றார்கள். இந்தநிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.”

– இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொதுத்தேர்தலை நடத்துவதற்கு எதிரணியினர் ஆரம்பத்தில் இருந்து தடைகளைப் பல்வேறு வழிமுறைகளில் ஏற்படுத்தினார்கள். கொரோனா வைரஸ் தாக்கத்தைப் பயன்படுத்தித் தொடர்ந்து பொதுத்தேர்தலைப் பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில், பொதுத்தேர்தலில் போட்டியிட்டால் பாரிய தோல்வியடைய நேரிடும் என்ற காரணத்தால் உயர்நீதிமன்றத்தில் எதிரணியினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட  வேட்புமனுக்களை இரத்துச் செய்ய வேண்டும் என எதிரணியினர் குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றுபடுத்தி புதிதாக வேட்புமனுத் தாக்கல் செய்யவே எதிரணியினர் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல்வாதிகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தேவை கிடையாது. ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மைக்கு ஏற்ப செயற்பட்டால் பிரச்சினைகளுக்குத் தீர்வைக்  காணலாம்” – என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir