தொண்டமானின் மறைவு மலையகத்துக்கு பேரிழப்பு – திகாம்பரம் இரங்கல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமாகிய ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு எனத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகம் தொண்டமானின் மறைவு தொடர்பில் அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு  குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் தனது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு செய்து அதிர்ச்சியைத் தருகின்றது. இவரது இழப்பானது மலையக மக்களுக்குப் பேரிழப்பாகும்.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவை அடுத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு இவர் புதிய தலைமை வகித்து அமைச்சுப் பதவிகள் பெற்று மலையக மக்களுக்குச் சேவையாற்றியுள்ளார்.

அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் ஆறுமுகன் தொண்டமானுக்கும் எனக்கும் இடையில் இருந்தபோதும் தனிப்பட்ட ரீதியில் எவ்வித கோபதாபங்களும் இருந்ததில்லை. அதனால் அவரது மறைவு கவலை அளிக்கின்றது. அரசியல் கட்சி பேதங்களை மறந்து ஆறுமுகம் தொண்டமானின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மலையக மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மலையக மக்களுக்குத் தலைமை கொடுத்த தலைவர் மற்றும் அமைச்சர் என்ற அடிப்படையில் அரச மரியாதையுடன் இறுதிக் கிரியைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். மலையக மக்கள் கட்சி பேதமின்றி துயரில் பங்கெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir