நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் இடம்பெற்றுவரும் போராட்டங்களின் போது, உத்தரவுகளை மீறிய 4,000இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
46 வயதான ஜோர்ஜ் ஃபிலாய்ட் உயிரிழந்த மே 26ஆம் திகதி முதல் இந்த கைது சம்பவங்கள் கணக்கிடப்பட்டு வருவதாக அமெரிக்காவின் பிரபல ஊடகமான சி.என்.என் மதிப்பிட்டு அறிக்கை தெரிவிக்கின்றது.
வன்முறையில் ஈடுபட்டவர்களும், ஊரடங்கு உத்தரவை மீறியும் செயற்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த தலைநகர் வொஷிங்டனுக்கு மேலதிகமாக 1,700 படைவீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். வெள்ளை மாளிகை போராட்டக்காரர்களால் சூழப்பட்டதன் பின்னணியில் இவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அட்லாண்டா, சிகாகோ, டென்வர், லொஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ மற்றும் சியாட்டில் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், வொஷிங்டன் மற்றும் பிற 15 மாநிலங்களில் தேசிய பொலிஸ்படை வீரர்கள் மற்றும் விமான வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டங்களின் போது, இண்டியானாபோலிஸில் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. இது சமீபத்திய நாட்களில் டெட்ராய்ட் மற்றும் மினியாபோலிஸில் பதிவு செய்யப்பட்ட இறப்புகள் ஆகும்.
46 வயதான ஜோர்ஜ் ஃபிலாய்ட், நான்கு மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரிகளால் கடந்த திங்கட்கிழமை கொல்லப்பட்டார். இதற்கு நீதிக் கோரியும், பொலிஸ் அதிகாரிகள் தண்டிக்கபட வேண்டுமெனவும் நியூஸிலாந்து, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.