20,000 டன் எண்ணெய் கசிவால் நேரிட்ட கொடுமை!!

ரஷ்யாவின் சைபீரிய மாகாண மின் நிலையத்தில் உள்ள எண்ணெய் தொட்டியில் ஏற்பட்ட கசிவு ஆற்றில் கலந்து மாசுபடுத்தியுள்ளதால் அங்கு அவசரநிலை பிறப்பித்து அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யா நாட்டில் சைபீரியா மாகாணத்தின் நோரில்ஸ்க் நகரில் இருக்கும் மின்நிலையம் உலகின் முன்னணி நிக்கல் மற்றும் பல்லேடியம் உற்பத்தியாளரான, நோரில்ஸ்க் நிக்கலின் துணை நிறுவனத்திற்கு சொந்தமானது.

மின் நிலையத்தில் உள்ள எண்ணெய் தொட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை தீடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.

அந்த தொட்டியில் இருந்த சுமார் 20,000 டன் எண்ணெய் முழுவதும் அருகில் உள்ள அம்பர்ன்யா நதியில் கலந்துள்ளது.

ஆனால் இந்த கசிவு ஏற்பட்டு, எண்ணெய் முழுவதும் ஆற்றில் கலந்த இரண்டு நாட்களுக்கு பிறகு தான் அதன் பாதிப்பை கண்டறிந்த அதிகாரிகள் தற்போது ஆற்றில் கலந்துள்ள எண்ணெயை அகற்றும் பணியில் இறங்கியுள்ளனர்.

இந்த எண்ணெய் கசிவு 350 சதுர கிலோ மீட்டர் அளவிலான ஆற்றை மாசுபடுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் ஆம்பர்ன்யா நதி முழுவதும் எண்ணெய் கலந்துள்ளதால் அது சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறது.

இது தொடர்பாக நேற்று காணொலிக்காட்சி மூலம் பேசிய ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின், எண்ணெய் கசிவை தாமதமாக கண்டுபிடித்ததற்கும் அதிகாரிகளின் அலட்சித்திற்கும் அவர் கடிந்துகொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சைபீரிய மாகாண ஆளுநர் அலெக்ஸேண்டர் உஸ், ‘விபத்து தொடர்பாக அதிபரிடம் முழுவதும் எடுத்துரைத்துள்ளோம், இது குறித்து விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார் எனவும் அப்பகுதியில் அவசரநிலையை பிறப்பித்து நிலைமையை சீராக்கவும் அறிவுறுத்தியுள்ளார் எனவும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir