அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜோர்ஜ் ஃபிளொயிட்டின் உடல் தங்கமுலாம் பூசப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.
அத்துடன் ஃபிளொயிட்டிற்கான அஞ்சலி நிகழ்வுகள் நேற்று ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் 3 நகரங்களில் ஆறு நாட்கள் ஜோர்ஜ் உடலுக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று , ஹூஸ்டனில் இறுதிச்சடங்குகள் இடம்பெறவுள்ளது.
நேற்று முதலாவது அஞ்சலி நிகழ்வு மினியாபொலிஸ் நகரத்தில், ஃபிளொயிட் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள வடமத்திய பல்கலைகழகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.
அந்தவகையில் இன்று ஃபிளொயிட்டின் பிறந்த இடமான வட கரோலினாவின் ரேஃபோர்டில் அஞ்சலி நிகழ்வு நடக்கும்.
நேற்று நடந்த அஞ்சலி நிகழ்வில் 8 நிமிடம் 46 விநாடிகள் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நேர அளவு, ஃபிளொயிட், பொலிசாரின் பிடியில் உயிருக்கு போராடிய நேரமாகும்.
நேற்றைய அஞ்சலி நிகழ்வில் ஹொலிவுட் பிரபலங்கள், இசை நட்சத்திரங்கள், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஃபிளொயிட் கொல்லப்பட்ட மினியாபொலிஸ் நகர மேயர், உடலின் முன் முழங்காலிட்டு உட்கார்ந்து, கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினார்.
அங்கு உரையாற்றிய மனித உரிமைச் செயற்பாட்டாளர் ரெவ் ஷார்ப்டன், “எங்கள் கழுத்துக்களில் இருந்து உங்கள் முழங்கால்களை எடுங்கள்“ என வெள்ளையின மக்களிடம் பகிரங்கமாக கோரினார். அவரது உணர்வுபூர்வ உரை அமெரிக்க ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்துள்ளது.
இதேவேளை கொரோனா கட்டுப்பாடு காரணமாக 500 பேரே அஞ்சலி நிகழ்வில் அனுமதிக்கப்பட்டனர்.
ஃபிளொயிட் கொல்லப்பட்ட இடத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, பெரிய சுவரோவியம் வரையப்பட்டிருந்ததுடன் அதில், “என்னால் இப்பொழுது சுவாசிக்க முடியும்“ என எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.