“அளுத்கம – தர்கா நகர் பகுதியில் பொலிஸாரால் தாக்கப்பட்ட 14 வயது சிறுவனுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். சில பொலிஸ் அதிகாரிகளின் இவ்வறான செயற்பாடுகள் கொரோனா வைரஸ் ஒழிப்பில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ள அனைத்துப் பாதுகாப்பு துறையினரின் சேவையையும் கேள்விக்குட்டுத்தியுள்ளது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தாரிக் அஹமட் என்ற குறித்த சிறுவன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தச் செயல் துரதிஷ்டவசமானது என்பதோடு ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம் கொரோனா ஒழிப்புக்காகவும் அதிலிருந்து மக்களைக் பாதுகாப்பதற்காகவும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பெரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் ஒரு சில பொலிஸ் அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள் ஏனைய பாதுகாப்புத்துறையினரின் அர்ப்பணிப்பையும் கேள்விட்குட்படுத்தியுள்ளது.
எனவே, இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு நாம் எமது முழுமையான ஆதரவை வழங்குவோம். அத்தோடு பாதிக்கப்பட்ட குறித்த சிறுவனுக்கு நீதி வழங்கப்படும் என்று நம்புகின்றேன்” – என்றார்.