யாழ். மாவட்டத்திலிருந்து முன்னெடுக்கப்படும் புகையிரத சேவைகள் கடந்த சில மாதங்களாக முடங்கியிருந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து பொதுப்போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டிருந்தன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்று காலை காங்கேசன்துறையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி புகையிரதம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடைந்து அங்கிருந்து 9.45 மணியளவில் கொழும்பை நோக்கி புறப்பட்டுள்ளது.
புகையிரத பயணிகள் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் வைத்து உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பயணத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
என்ற போதும் யாழில் இருந்து கொழும்பிற்கு செல்வதற்காக புகையிரத நிலையத்தை நாடிய பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் கூறுகையில், இன்றிலிருந்து யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 5.45 மணிக்கு கொழும்பிற்கான முதலாவது சேவையும், இரண்டாவது சேவை 9.45 மணிக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.