அமெரிக்காவில் ஜோர்ஜ் பிளாய்ட் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த மின்னபொலிஸ் காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகர் மின்னபொலிசில், மே 25ம் திகதி, 46 வயதான ஜோர்ஜ் பிளாய்ட் என்ற ஆபிரிக்க அமெரிக்கர், பொலிஸ் அதிகாரி டெரொக் சாவின் பிடியில் இருந்தபோது கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தார். ஜோர்ஜை கீழே தள்ளி அவரின் கழுத்தைத் தன் கால் முட்டியால் டெரொக் அழுத்தும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின.
‘ஜோர்ஜின் மரணத்துக்கு நீதி வேண்டும்; அமெரிக்காவில் உள்ள ஆபிரிக்க அமெரிக்கர்கள் மீது நடத்தப்படும் இனவெறித் தாக்குதலுக்கு முடிவு கட்டவேண்டும்; அமெரிக்காவிலுள்ள அதிகார வரம்பை மாற்றியமைக்க வேண்டும்’ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கொரோனா அச்சத்தை பொருட்படுத்தாமல், கடந்த இரு வாரங்களாகப் பல லட்சக்கணக்கான மக்கள், சாலைகளில் திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, ஜோர்ஜ் கழுத்தின் மீது கால் வைத்து அழுத்திய சாவின் மற்றும் சம்பவத்தின் போது உடனிருந்த மேலும் 3 பொலிசார் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
சாவின் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கும், மற்றவர்கள் மீது கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருந்தும் அமெரிக்கப் போராட்டத்தில், பொலிசாரின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. மக்கள் மீது பொலிசார் அத்துமீறித் தாக்குதல் நடத்தும் பல வீடியோக்கள் வெளியாகி போராட்டத்தை மேலும் வலுப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் மின்னபொலிஸ் நகரின் கவுன்சில் தலைவர் லிசா பெண்டர், ‘மின்னபொலிஸ் நகரில் செயல்பட்டு வரும் காவல்துறையை முற்றிலும் கலைத்துவிட்டு புதிதாகக் கட்டமைக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் சமூகம் மற்றும் மக்களுடன் இணைந்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல்துறையை உருவாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’ என, அறிவித்தார்.
போராட்டத்துக்குக் காரணமாக இருந்த, மின்னபொலிஸ் காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக, அறிவித்திருப்பது, போராட்டக்காரர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனாலும், இனவெறிக்கு எதிரான போராட்டம், தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.