ரஷ்யாவில் கைதான ஐஎஸ் தீவிரவாதி பகீர் தகவல்

ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு படையான எப்எஸ்பி, ஐஎஸ் தீவிரவாதி ஒருவனை சமீபத்தில் கைது செய்துள்ளது. அவனிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் ஆளும்கட்சியை சேர்ந்த தலைவர் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த சதித் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, ரஷ்யாவின் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரஷ்யாவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். இவன் மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாட்டை சேர்ந்தவன்.இவன் இந்தியாவின் ஒன்றிய அரசின் மிக உயர்ந்த தலைவரை மனிதவெடிகுண்டாக மாறி கொல்ல திட்டமிட்டு இருந்துள்ளான்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஏப்ரலில் இருந்து ஜூன் வரை துருக்கியில் இருந்துள்ளான். ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த தலைவன் ஒருவன் தற்கொலை படை தாக்குதல் பயிற்சியை அளித்துள்ளான். டெலிகிராம் மெசேஜ் ஆப் மூலமாகவும், இஸ்தான்புல்லில் நேரடியாகவும் இருவரும் சந்தித்துள்ளனர். இது குறித்து விசாரணையின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்கில் பரவி வருகின்றது.

இந்த வீடியோவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி, ‘‘முகமது நபியை அவமதித்ததற்காக இஸ்லாமிய நாட்டின் ஐஎஸ் அமைப்பின் உத்தரவின்பேரில் தீவிரவாத தாக்குதலை நடத்த எனக்கு இந்தியாவில் பொருட்கள் வழங்கப்பட வேண்டி இருந்தது. ரஷ்யாவில் தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து இந்தியாவிற்கு புறப்படும்படி பணிக்கப்பட்டு இருந்தது’’ என்று தெரிவித்துள்ளான்.

You May Also Like

About the Author: kalaikkathir