மோசடி வழக்கில் அபராதம் செலுத்திய இயக்குநா் லிங்குசாமி

காசோலை மோசடி வழக்கில் இயக்குநா் லிங்குசாமி 10,000 ரூபா அபராதத்தை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றதில் இன்று  செலுத்தினார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகா் காா்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், ‘எண்ணி ஏழு நாள்’ என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, இயக்குநா் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதா்ஸ் நிறுவனம், பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் 1.3 கோடி ரூபா கடன் பெற்றிருந்தது. இந்தக் கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல், தொடா்ந்து படம் எடுத்ததையடுத்து, திருப்பதி பிரதா்ஸ் நிறுவனத்துக்கு எதிராக, பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த இயக்குநா் லிங்குசாமிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடா்ந்து, இயக்குநா் லிங்குசாமி, 1.3 கோடி ரூபாவுக்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனத்துக்கு வழங்கினாா்.

இந்த காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாமல், திரும்பி வந்ததையடுத்து, இயக்குநா் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரா்களுக்கு எதிராக பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கைத் தொடுத்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இயக்குநா் லிங்குசாமி, அவரது சகோதரருக்கு 6 மாத சிறைத் தண்டனை அல்லது 10,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டும் என்று திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்த லிங்குசாமி, மேல்முறையீடு செய்து சட்டரீதியாக பிரச்னையை சந்திப்போம் எனத் தெரிவித்த நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 10,000 ரூபா அபராதத்தை இன்று செலுத்தினார்.

 

You May Also Like

About the Author: kalaikkathir