இறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை: இறுதிச் சடங்கில் எழுந்ததால் அதிர்ச்சி

மெக்ஸிகோவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை இறுதிச் சடங்கில் திடீரென எழுந்து சில மணி நேரங்களுக்குப் பின் மீண்டும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவின், வில்லா டி ராமோசைச் சேர்ந்தவர் கமீலா ரொக்ஸானா. இவரது 3 வயது குழந்தைக்கு சமீபத்தில் வயிற்று வலி வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, டாக்டர்கள் குழந்தையை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.ஆனாலும் இரு நாட்களுக்குப் பின் குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தையின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. அப்போது குழந்தையின் உடலில் திடீரென அசைவு ஏற்பட்டது. பரிசோதித்ததில் குழந்தைக்கு நாடித்துடிப்பு இருந்துள்ளது. இதையடுத்து குழந்தை உடனடியாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தொடர் சிகிச்சை அளித்தும் சில மணி நேரங்கள் கழித்து குழந்தை உயிரிழந்தது.

சிறுமியின் உயிரிழப்புக்கு பெருமூளை வீக்கமே காரணம் என டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக முதலில் தவறுதலாக அறிவித்த டாக்டர்கள் மீது குழந்தையின் தாய் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir