இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டன் வந்தடைந்தார். உலக தலைவர்களின் வருகையால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் (96) கடந்த 8ம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த 13ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 4 நாட்களுக்கு மேலாக லட்சக்கணக்கான மக்கள் ராணி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நாளை ராணி எலிசபெத்திற்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். அதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன் கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் நேற்றிரவு விமானம் மூலம் புறப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு. இன்று அதிகாலை லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை இந்திய தூதரக அதிகாரிகள், இங்கிலாந்து அரசு பிரதிநிதிகள் வரவேற்றனர்.
நாளை வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் அரசு இறுதிச் சடங்கில் ஜனாதிப்தி திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார். இந்நிலையில் திங்களன்று ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை ஒளிபரப்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்து முழுவதும் சுமார் 125 திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் திரைகளை அமைத்து நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகின்றன. கடந்த 1997ம் ஆண்டு இறந்த இளவரசி டயானாவின் இறுதிச் சடங்குகள், கடந்த 2012ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்ஸ் மற்றும் அரச திருமணங்கள் உட்பட, சமீபத்திய இங்கிலாந்து வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள் ஆகும். தற்போது அந்த பட்டியலில் ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கும் சேரவுள்ளது.