வன்முறையை ஊக்குவிக்கும் சினிமா இயக்குனர்கள்!!

இளைஞர்களை பயன்படுத்தி தமிழ் சினிமா இயக்குனர்கள் வன்முறையை ஊக்குவிக்கிறார்கள்’ என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

மதுரையில் அவர் கூறியதாவது: இந்தியாவின் துாய்மையான நகரங்கள் பட்டியலில் இந்த ஆண்டு, முதல் 10 இடத்திற்குள் சென்னை, மதுரை, கோயம்புத்துார் இடம் பெறவில்லை. துாய்மை பணியில் தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதற்கு இது சான்று. மக்கள் டெங்கு காய்ச்சல், தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவதற்கு துாய்மையின்மையே காரணம்.

அதனால் தமிழகம் முழுவதும் மக்கள் இயக்கத்தை உருவாக்கி பொதுமக்களிடையே துாய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். மக்கள் இயக்கத்திற்கு பள்ளிகள், கல்லுாரிகள், சமூக ஆர்வலர்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளின், ஊராட்சிகளின் ஒத்துழைப்பு வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குள் இந்த மக்கள் இயக்கத்தின் மூலம் நாட்டின் துாய்மைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் தமிழகத்தின் பெரு நகரங்களை கொண்டு வருவோம்.

தமிழ் திரைப்படங்களில் அதிக வன்முறை, ஆபாச காட்சிகளை இயக்குனர்கள் திணிக்கின்றனர். இதுபோன்ற திரைப்படங்களை பார்ப்பதால் இளைஞர்கள் கெட்டுப் போகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் அரிவாள் கலாச்சாரம் அதிகரிக்கும்.

இளைஞர்களின் பலவீனங்களை அறிந்து, இயக்குனர்கள் இதுபோன்ற திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். அவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். இவ்வாறு கூறினார்.

You May Also Like

About the Author: kalaikkathir