எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

மேலும் அந்த நாடு விரைவில் 7-வது அணு குண்டு சோதனையை நடத்த தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேற்று ‘ஹவாசோங்-17’ என்கிற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஆய்வு செய்து, பின்னர் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின்போது கிம் ஜாங் அன்னின் மகள் உடன் இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் கிம் தனது மகளை முதல் முறையாக வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை கிம் தனது மகளுடன் சேர்ந்து பார்வையிட்டார்.

தற்போது மீண்டும் ராணுவ வீரர்களுடனான முக்கிய சந்திப்புக்கு கிம் தனது மகளை அழைத்து வந்தது கவனம் பெற்றுள்ளது. இதனிடையே ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய கிம், “உலகின் மிகவும் வலிமை மிக்க அணு சக்தியைக் கொண்டிருப்பதே வடகொரியாவின் இறுதி இலக்கு. அது இந்த நூற்றாண்டின் முன்னோடியில்லாத முழுமையான அணுசக்தியாக இருக்கும்.
‘ஹவாசோங்-17’ ஏவுகணை உலகின் வலிமையான ஆயுதம். இது வட கொரியாவின் உறுதியையும், உலகின் வலிமையான ராணுவத்தை உருவாக்குவதற்கான திறனையும் நிரூபித்தது” என கூறினார்.

You May Also Like

About the Author: kalaikkathir