வெடுக்குநாறி மலையில் இருந்த ஆதிசிவன் ஆலயம் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கிறது. அது போன்றே மணற்கேணி சிவன் ஆலயமும் இடித்தழிக்கப்பட்டிருக்கின்றது. மற்றொரு பக்கத்தில் கச்சதீவில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு அரசமரம் வளர்க்கப்பட்டு அங்கும் பௌத்த அடையாளங்கள் உருவாக்கப்படுகின்றன. குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவை மீறி தொல்லியல் இடத்தில் விகாரை ஒன்று முழுமையாகக் கட்டியெழுப்பப்படுகின்றது. யாழ்ப்பாணம், புத்தூர், நிலாவரையில் திடீரென ஒரு புத்தர் சிலை வைக்கப்படுகின்றது.
வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயப் பகுதி இப்போது ஒரு புத்த விகாரையாக கூகுள் வரைபடத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கச்சதீவில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதை ஒருவித சமாளிப்புடன் கடற்படை ஏற்றுக்கொள்கிறது. குருந்தூர் மலையில் சட்ட நியமங்களின்படி சென்று தமிழ் மக்கள் நீதியின் கதவுகளைத் தட்டுவதற்கிடையில் அங்கு எல்லாமும் முடிந்து போயிருக்கும்.
இப்படி திரும்பிய இடமெல்லாம் மூச்சுமுட்டுமளவிற்குத்தமிழர்கள்பௌத்த சிங்களபேரினவாதத்தின் ஆக்கிரமிப்பை உணர்கிறார்கள். இது 35 வருடங்களின் முன்னர் ஆயுதப் போராட்டங்களை ஊக்குவித்த களச் சூழலை ஒத்த நிலமையை
உணர்த்தி நிற்கின்றது.
பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் ஆதரவின்றி அல்லது அதனது தலைமையிடமான மகா சங்கங்களின் ஆதரவின்றி ஆட்சி அதிகாரத்தில் தொடரமுடியாது என்று சிங்கள ஆட்சியாளர்கள் கருதுகின்ற வரைக்கும் இத்தகைய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகத் தமிழர்கள் எதையும் செய்ய முடியாத நிலைமையே இருக்கின்றது. சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும்கூட இவற்றைத் தடுத்து நிறுத்தும் வல்லமையைத்தமிழர்கள் இழந்துபோயிருக்கிறார்கள் என்பது கண்கூடு.
1980களில் ஆயுதப் போராட்டம் முகிழ்த்ததன் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த இந்தப் பணிகளை பௌத்த சிங்களப் பேரினவாதம் இப்போது மீண்டும் விட்ட இடத்திலிருந்து தீவிரப்படுத்தி வருகின்றமை கண்கூடு. ஆனால், அதைத் தடுத்து நிறுத்தும் வல்லமையைத் தமிழீழ விடுதலைப் புலிகள் தவிர்ந்த வேறு எந்தவொரு அணுவுக்கும் இல்லை என்பதும் இப்போது நிரூபணமாகியிருக்கின்றது.
புலிகள் தமது ஆயுத மற்றும் வன்முறைப்பலத்தின் மூலம் 30 ஆண்டுகளாக வடக்கு கிழக்கை பௌத்த சிங்களமயமாக்கத்தில் இருந்து பாதுகாத்தார்கள். இப்போது அத்தகைய எந்தவொரு அரசியல் சக்தியும் இல்லாத நிலையில் இன்னும் ஒரு தசாப்த காலத்தில் வடக்கு கிழக்கு முழுமையான பௌத்த மயப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாமல் போகும்.
இந்த விடயத்தை பன்னாட்டு அரங்கத்திற்குக் காவிச் செல்வதன் மூலம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கைகளும் முழுமையாகச் சிதைந்துபோய்விட்ட நிலையில் தமிழர்களின் எதிர்காலம் இந்தத் தீவில் நிச்சயமற்றதாக மாறி வருகின்றது.