இலங்கையின் பணவீக்க வீதம் டிசம்பரில் ஒற்றை இலக்கத்திற்குக் குறையும்: அமைச்சர் சியம்பலாபிட்டிய

டிசெம்பர் மாதத்திற்குள் நாட்டின் பணவீக்க வீதம் முன்னைய நிலையில் இருந்து ஒற்றை இலக்கத்திற்கு திரும்பும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவிசாவளை, சித்தாவகபுர நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சில மாதங்களுக்கு முன்னர் அதிக பணவீக்க நிலைமைகளின் போது எமது நாடு உலகில் ஐந்தாவது இடத்தில் இருந்தது. ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, அதிக பணவீக்க வீதத்துடன் ஐந்தாவது நாடாக நமது நாடு பட்டியலிடப்பட்டது. இது ஓர் இக்கட்டான சூழ்நிலை. ஆனால், சில நாட்களுக்கு முன்பு அந்தப் பட்டியலில் இருந்து நமது நாட்டை குறித்த பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது, என அமைச்சர் கூறினார்.

நமது நாட்டில் 95% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் தற்போது 60% ஆகக் குறைந்துள்ளது, அதே சமயம் 70% ஆக இருந்த சராசரிப் பணவீக்கம் 50% க்கும் கீழ் குறைந்துள்ளது என்றும், இதன் அடிப்படையில் பல சிரமங்களை எதிர்கொண்டு மிக விரைவாகத் தன்னை மீட்டெடுக்கும் ஒரு நாடாக இலங்கையை அடையாளப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பாராட்டியுள்ளதுடன், இந்த டிசம்பரில் பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்குக் குறையும் என்று கூறியுள்ளதாகவும் அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply