ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் வழங்கிய வழக்கில் ட்ரம்ப் பிணையில் விடுதலை

ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைப்பதற்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நியுயோர்க்கில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜரான ட்ரம்ப், முறைப்படி கைது செய்யப்பட்ட பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளார்.

அவர் வழங்கியதாகக் கூறப்படும் பெரும்பாலான தொகைகள் 2016 ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்தைய நாட்களில் ஓர் ஆபாசத் திரைப்பட நட்சத்திரத்திற்கு  கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆயினும், 76 வயதான  டிரம்ப் இந்த விடயத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளார்.

ட்ரம்ப் மீதான வழக்கின் நீதிமன்ற நடைமுறைகள் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தன. ட்ரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசிக்கையில் ட்ரம்ப், “நான் குற்றம் செய்யவில்லை” என்று மட்டுமே பதிலளித்தார்.

2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இரண்டு பெண்களுக்கு  ட்ரம்ப்புடன் அவர்கள் நடத்திய முன்னைய காலப் பாலியல் ரீதியிலான சந்திப்புகள் பற்றிப் பேசுவதைத் தடுக்க பணம் கொடுத்ததாக இந்த வழக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆபாச நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸ்க்கு $130,000 (£105,000) கொடுக்க ட்ரம்ப் ஏற்பாடு செய்திருந்ததாகக் மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அல்வின் ப்ராக் கூறினார். டேனியல்ஸ் அப்போதைய வேட்பாளருடனான தனது விவகாரம் குறித்து அமைதியாக இருக்க ட்ரம்பின் வழிகாட்டுதலின் பேரிலேயே பணம் செலுத்தியதாக  ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் கூறியதாக பி.பி.சி. செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர்களாகப் பதவி வகித்தவர்களில் குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்ட முதல் நபர் டொனால்ட் ட்ரம்ப்தான். அந்த வகையில், நீதிமன்றத்தில் ட்ரம்ப் ஆஜரான அந்த 57 நிமிடங்களும் அமெரிக்க அரசியல் வரலாற்றில் கறுப்புப் பக்கங்களாகப் பதிவாகியுள்ளதாக பி.பி.சி. செய்திகள் கூறுகின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply